பக்கம் எண் :

ஈன்றாண் முகத்தேயு மின்னாதா லென்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.

 

ஈன்றாள் முகத்தேயும் களி இன்னாது - மக்கள் எக்குற்றஞ் செய்யினும் பொறுத்துக் கொள்ளும் மட்டற்ற அன்புள்ள தாய் முன்பும் கள்ளுண்டு வெறித்தல் துன்பந் தருவதாம்;மற்றுச் சான்றோர் முகத்து என்- பின்பு ; எக்குற்றமும் பொறாத அறிவுடையோர் முன் அது எத்தகையதாம்?

ஐம்புலனு மடங்கி அடியோடு உணர்விழத்தலும், வாய்காவாது மறைவெளிப்படுத்தலும் பித்தர்போற் பிதற்றலும்,ஆடை விலகலும் அற்றம் மறையாமையும், தீநாற்றம் வீசுதலும், வாய் நுரைதள்ளுதலும், வழியிற் கிடத்தலும் வழிப்போக்கர் பழித்தலும், ஈமொய்த்தலும், இளஞ்சிறார் சிரித்தலும், கண்ணாரக்காணின் , பெற்றதாயும் பொறாது கண்டனஞ் செய்வளாதலின், கள்ளக் கண்ணாலுங் காணப் பொறாது நெடுந்தொலைவில் நீங்கும் தூயவொழுக்கமுள்ள சான்றோர்க்கு, அக்காட்சி அளவிறந்த அருவருப்பையும் வெறுப்பையும் விளைக்கும் என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை யென்பதாம்.உம்மை உயர்வு சிறப்பு.'மற்று' பின்மைப் பொருளது. 'ஆல்' அசைநிலை.