பக்கம் எண் :

நாணென்னு நல்லாள் புறங்கொடுக்குங் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

 

கள் என்னும் பேணாப் பெருங் குற்றத்தார்க்கு- கள்ளுண்டல் ஆகிய பழித்தற்குரிய பெருங் குற்றத்தைச் செய்தவர்க்கு; நாண் என்னும் நல்லாள் புறம் கொடுக்கும் - நாணம் என்று சொல்லப்படும் பெண் தெய்வம் முகத்தில் விழிக்கவும் அருவருத்துப் புறங்காட்டி நிற்பாள்.

பெற்ற தாய்க்கும் வெறுப்பை விளைத்தலின் 'பேணா' என்றும், ஒழுக்கக் கேட்டை மட்டுமன்றி உயிர்க் கேட்டையும் உண்டாக்குதலின் 'பெருங்குற்றம்' என்றும் , கள் வெறியர் மானத்தை அறவே இழந்து விடுதலின் 'நாண்.......புறங்கொடுக்கும்' என்றும், கூறினார். 'நல்லாள்' என்பது அழகுபற்றிப் பெண்ணிற் கொருபெயர். 'நல்லபிள்ளை' என்னும் உலக வழக்கையும், மைப்படு மழைக்கணல்லார் (சீவக.2881) என்னும் செய்யுள் வழக்கையும், நோக்குக.நாண் மென்மைக் குணமாதலின் பெண்ணாக வுருவகித்தார். "பெண்பாலாக்கியது வடமொழி முறைமைபற்றி" என்பது பரிமேலழகர் நச்சுக் கூற்று. 'கள்' ஆகுபொருளது. இம்மூன்று குறளாலும் கள்ளுண்டல் ஒளியிழத்தற்குக் கரணியமென்று கூறப்பட்டது.