பக்கம் எண் :

கையறியாமை யுடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

 

பொருள் கொடுத்து மெய் அறியாமை கொளல்- ஒருவன் விலைப்பொருள் கொடுத்துக்கள்ளால் வரும் மெய்ம்மறதியை வாங்குதல்; கை அறியாமை உடைத்தே - செய்யும் முறைமையறியாமையைக் கரணியமாக வுடையதே.

'கை' செய்கை; கருவியாகு பெயர். கையறுதல் செயலறுதல். கையறியாமை செய்கை அல்லது செய்யும் முறைமை யறியாமை. கையறியாப் பேதை என்று ஆசிரியர் வேறிடத்துங் கூறுதல் காண்க. (குறள்.836) உலகத்தார் எங்கும் என்றும் நல்ல பொருளையே விலை கொடுத்து வாங்குவது இயற்கை. பொதுவாக மெய்ம்மறதி மயக்கம் என்னும் நோயால் உண்டாவது. நோய் நீக்கும் மருந்தையன்றி நோயை விலைக்கு வாங்கார். கள்ளை விலை கொடுத்து வாங்கி அதனாற் மயக்கத்தைப் பெறுவது,நோயை விலைக்கு வாங்குவது போன்றதே. இது அறிவில்லாத சிறுவரும் அறிவுதிரிந்த பித்தரும் செய்யுஞ் செயல்போன் றிருத்தலால், 'கையறியாமை யுடைத்தே' என்றார். இதற்குப் பழவினையைக் கரணியமாகக் காட்டுவர் பரிமேலழகர். ஏகாரம் தேற்றம்.