பக்கம் எண் :

துஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்று
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

 

துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் - உறங்குபவர் உயிருடையரேனும் அறிவும் மனவுணர்வும் அந்நிலையிலின்மையால் இறந்தவரை யொப்பர்; கள் உண்பவர் எஞ்ஞான்றும் நஞ்சு உண்பர் - அதுபோல் , கள்ளுண்பவர் இறவாதிருப்பினும் அறிவையும் உடல் நலத்தையும் என்றுமிழத்தலால் நாள்தோறும் நஞ்சுண்பவரை யொப்பர்.

"இதனை நிரனிறை யாக்கி, திரிக்கப்படுதலால் உறங்கினாரும் நஞ்சுண்பாரு மொப்பர்; கைவிடப் படுதலாற் செத்தாருங் கள்ளுண்பாரு மொப்ப ரென்றுரைப்பாருமுளர்.அதிகாரப் பொருள் பின்னதாயிருக்க யாது மியைபில்லாத நஞ்சுண்பாருக்கு உவமை புணர்த்து ஈண்டுக் கூறல் பயனின்றாகலானும், சொற்கிடக்கை நிரனிறைக் கேலாமையானும், அஃதுரையன்மை யறிக."என்று பரிமேலழகர் மறுத்திருப்பது முற்றும் சரியே. இக்குறளில் வந்துள்ளது எடுத்துக்காட்டுவமை. 'துஞ்சினார்', செத்தார் என்பன இங்குச் சிறப்புப்பொருள் குறித்தன வல்ல.