பக்கம் எண் :

உள்ளொற்றி யுள்ளூர் நகப்படுவ ரெஞ்ஞான்றுங்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.

 

கள் ஒற்றிக் கண்சாய்பவர் - கள்ளை மறைந்துண்டு அதனால் வெறியேறி அறிவு தளர்பவர்; உள் ஊர் உள் ஒற்றி எஞ்ஞான்றும் நகப்படுவர் - உள்ளூராரால் உள்ளத்திலுள்ள மறைபொருள்கள் உய்த்துணரப்பட்டு எப்போதும் நகையாடப்படுவர்.

கள்வெறியினால் உணர் விழந்தவர் பொருள் விளங்காத தொடர்களை மட்டுமன்றி, நனவுக் காலத்தில் தம் உள்ளத்தில் மறைத்துவைத்திருந்தனவும் தமக்கு மாறானவும் தம்மைத் தாழ்த்து வனவுமான செய்திகளையும் வெளிவிடுவராதலின் , உள்ளொற்றியுள்ளூர் நகப்படுவர் என்றார். கள்ளைக்குடித்தால் உள்ளதைச்சொல்வான் . 'கள்ளைக்கொடுத்துக் கருமத்தை (காரியத்தை) அறி'. என்பன பழமொழிகள் .'உள்ளூர்' 'இலக்கணப்போலி'. 'ஊர்' 'கண்' ஆகுபெயர்கள். உண்டு என்பது அவாய்நிலையான் வந்தது.