பக்கம் எண் :

களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைக் தீத்துரீஇ யற்று.

 

களித்தானைக் காரணம் காட்டுதல் - கள்ளுண்டு வெறித்தவனை இது தகாதென்று ஏதுக்களைக் காட்டித் தெளிவித்தல்; நீர்க்கீழ்க் குளித்தானைக் தீத்துரீஇய அற்று- நீர்க்குள் முழுகினவனை விளக்கொளியால் தேடிப்பார்த்தலை யொக்கும்.

விளக்கொளி நீருட் செல்லாது போன்று ஏதுரை கட்குடியன் மனத்துட் செல்லா தென்பதாம். களித்தானைக்காட்டுதல் என்பது களித்தானுக்குக் காட்டுதல் என்று பொருள்கொள்ளின் வேற்றுமை மயக்கமும் , களித்தானைக் காணச் செய்தல் என்று பொருள் கொள்ளின் வேற்றுமையியல்பும் , ஆம். இங்ஙனமே 'அவளைக் காட்டென்றானோ' என்னுங் கலித்தொகைத் தொடருங் கொள்ளப்படும் (72). 'கீழ்நீர்' இலக்கணப்போலி. 'துரீஇ' இன்னிசையளபெடை. இக்குறளால் அடிப்பட்ட கட்குடியனைத் திருத்த முடியாமை கூறப்பட்டது.