பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்

அதிகாரம் 94. சூது

அஃதாவது, கள்ளூண் போன்றே அறம் பொரு ளின்பங்கட்குத் தடையாய் நின்ற பகைபோல் தீங்கு விளைக்கும் கவறாட்டு. சூது என்பது ஒருவகைக்காய். அதன் பெயர் இங்கு அதைக் கருவியாகக் கொண்டு ஆடும் கவறாட்டைக் குறித்தது ஆகுபெயர். கள்ளூண் போல் சூதாட்டமும் விலக்கப்படுவதாதலின், இவ்வதிகாரம் கள்ளுண்ணாமையின் பின் வைக்கப்பட்டது.

 

வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉந்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று .

 

வென்றிடினும் சூதினை வேண்டற்க - தான்வெல்லுந் திறமையும் வாய்ப்பும் உடையனாயினும் சூதாட்டை விரும்பற்க ; வென்றதூஉம் தூண்டில்பொன் மீன்விழுங்கிய அற்று-வென்று பொருள் பெற்றதும் இரையால் மறைக்கப்பட்ட தூண்டில் முள்ளை இரையென்று கருதி மீன் விழுங்கினாற் போன்றதே.

வெல்லுதல் உறுதியன்மையின் 'வென்றிடினும்' என்றும், தீயவழியிற் பொருள் வருதலான் 'வேண்டற்க' என்றும், கூறினார். தொடக்கத்தில் வென்ற பொருள் சூதாட்டை விட்டு ஒருபோதும் நீங்காதவாறு பிணிக்கும் பொறியென்பதும், அதனாற் பின்பு பொருளெல்லாம் இழந்து உயிரும் துறக்க நேருமென்பதும், உவமையாற் பெறப்படும். சூதாட்டின் தன்மையுள்ள சீட்டாட்டும் சூதாட்டே. சூதாட்டின் தன்மைகள்; வெற்றி உறுதியின்றிக்குருட்டு வாய்ப்பாயிருத்தல், சில வலக்காரங்கள் கையாளப் பெறுதல், தோற்றார் வைத்த பணந்திரும்பாமை,ஒருவன் உழைப்பின்றி விரைந்து பிறர் பணத்தாற் செல்வனாதல், இழக்குந்தொறும் ஆசையுண்டாகி மேன்மேலும் வறுமை மிகுதல், வென்றார் மீது பொறாமையுண்டாதற் கிடமாதல், உழைப்பில் விருப்பஞ் செல்லாமை என்பனவாம். சீட்டின் விலை மிகக்குறைந்தும் பரிசுத் தொகை மிகவுயர்ந்தும் பரிசுகள் மிகப்பல்கியும் இருப்பது, தூண்டில் முள்ளை மறைக்கும் இரைபோற் கவர்ச்சிக்குரியதாம். செல்வரது பொருளாலன்றி வறியவரது பொருளால் ஒருவன் செல்வனாதல், திருவள்ளுவர் அறநெறிக்கும் பொருள்நூற் கொள்கைக்கும் முற்றும்மாறாம். 'வென்றதூஉம்' இன்னிசை யளபெடை. 'பொன், ஆகு பெயர். இங்குப் பொன்னென்றது கரும்பொன்னாகிய இரும்பை.