பக்கம் எண் :

ஒன்றெய்தி நூறிழக்குஞ் சூதர்க்கு முண்டாங்கொ
னன்றெய்தி வாழ்வதோ ராறு.

 

ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும்-தூண்டில் முள்ளைப் பொதிந்த இரையைப் பெற்றுப் பின்பு உயிரையிழக்கும் மீன் போல, முதலாட்டத்தில் வென்று ஒரு தொகையைப் பெற்றுப் பின்பு இன்னும் பெறுவோம் என்னும் ஆசையால் மேலும் மேலும் ஆடி, முன்பு பெற்றதுபோல் நூறு மடங்கு இழந்து வறியராகி வாழ்நாள் குன்றியிறக்கும் சூதாடிகட்கும்; நன்று எய்தி வாழ்வது ஒர் ஆறு உண்டாம் கொல்-அறமும் இன்பமும் பெற்று நன்றாக வாழ்வதொரு வழியும் உண்டாகுமோ? உண்டாகாது.

பொருளைச் சூதாட்டிலேயே தொடர்ந்து செலவழிப்பதாலும் வரவரப் பொருள் குன்றி வருவதாலும், நன்றெய்தி வாழும் வழியில்லையென்றார். 'ஒன்று', 'நூறு' என்பன பொருள் குறியாது அளவு குறித்தன. 'நூறு' என்பது இங்குப் பேரெண்ணைக் குறித்தது. உம்மை இழிவு சிறப்பு. 'கொல், வினா.