பக்கம் எண் :

சிறுமை பலசெய்து சீரழிக்குஞ் சூதின்
வறுமை தருவதொன் றில்.

 

பல சிறுமை செய்து  சீர் அழிக்கும் சூதின் - பல்வேறு இழிவுதருந்துன்பங்களைச் செய்து, உள்ள பெருமையையுங் கெடுக்கும் சூதாட்டத்தைப்போல; வறுமை தருவது ஒன்றுஇல் - கொடிய வறுமையைத் தரக்கூடியது வேறொன்றுமில்லை.

நளன்போல் மக்களைவிட்டுப் பிரிவதும்,காதல் மனைவியைக் காட்டில் விட்டு நீங்குவதும் ; பாண்டவர் போல் மனைவியையும் பணையமாக வைத்திழப்பதும்; பகைவர் அவள் கூந்தலைப்பிடித்து அம்பலத்திற்கு இழுத்து வந்து மானக்கேடாய்ப் பேசி துகிலுரியப் பார்த்திருப்பதும், வென்றவர்க்கு அடிமையராகி மேலாடையைக் களைவதும், பல்வகைச் சிறுமைகளாம். சூது ஐம்பெருங் குற்றங்களுள் ஒன்றாதலாலும், அதையாடுவோர் தீயோரொடு சேர்த்து எண்ணப்படுவதாலும், தோற்றவர் நாட்டையும் செல்வத்தையும் இழத்தலாலும்,  'சீரழிக்கும்' என்றார்.