பக்கம் எண் :

பழகிய செல்வமும் பண்புங் கெடுக்குங்
கழகத்துக் காலை புகின்.

 

காலை கழகத்துப் புகின் - ஒருவன் அறம் பொருளின்பங்கட்குச் செலவிட வேண்டிய காலத்தில் சூதாடுகளம் புகுந்து ஆடுவானாயின்; பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் - அது தொல்வரவாகிய பழஞ் செல்வத்தையும் நற்குணங்களையும் நீக்கும்.

களம் என்றே பொருள்படும் கழகம் என்னும் பொதுச்சொல், இங்கு இடம்பற்றிச் சூதாடு களத்தைக் குறித்தது, 'பழகிய' என்னும் அடை பண்பையுந் தழுவும், ஆதலால் பண்பென்றது இங்கு வழிமுறைப் பண்பை. முன்னோர் தேட்டு முதுசொம் எனப்படும். தான் புதிதாகச் செய்துகொள்ளும் அறம்பொருளே யன்றிமுன்னோரிடமிருந்து வழிவழி வந்த செல்வமும் நற்பண்பும் இல்லாமற்போ மென்பதாம்.