பக்கம் எண் :

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ யருள்கெடுத்
தல்ல லுழப்பிக்குஞ் சூது.

 

சூது-சூதாட்டு; பொருள் கெடுத்து- தன்னைப் பயில்கின்றவன் தோல்வியால் அவன் செல்வத்தைக் கெடுத்து, பொய் மேற்கொளீஇ- வெற்றி பெரும் பொருட்டுப் பொய்யை மேற்கொள்ளப் பண்ணி; அருள் கெடுத்து- தோல்வி வருத்தத்தாலும் வென்றவன்மீது கொள்ளும் பொறாமையாலும் எழும் சினத்தால் அருள் நோக்கைக் கெடுத்து; அல்லல் உழப்பிக்கும்- இங்ஙனம் இருமையிலும் துன்புற்று வருந்தச் செய்யும்.

மூவகைத் தீங்குகளுள், முன்னதன் விளைவு இம்மையிலும் பின்னவற்றின் விளைவு மறுமையிலும் நிகழ்வனவாம். "பொருள் கொடுத்து என்பது பாடமாயின், அவ்வெச்சத்திற்கு முடிவு மேற்கொளீஇ என்புழி மேற்கோடலாகிய வினைமுதல்வினை" என்னும் பரிமேலழகர் உரை பொருந்துவதே. 'கொளீஇ' இன்னிசையளபெடை.