பக்கம் எண் :

உடைசெல்வ மூணொளி கல்வியென் றைந்து
மடையாவா மாயங் கொளின்.

 

ஆயம் கொளின்- ஒருவன் சூதாட்டைப் பொழுதுபோக்காகவோ பொருளீட்டும் வழியாகவோ மேற்கொள்ளின்; ஒளி கல்விச் செல்வம் ஊண் உடை என்று ஐந்தும் அடையாவாம்- அவனைப் பெயர் விளங்கலும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் ஆகிய ஐந்தும் சேராவாம்.

அகவுடைமையும் புறவுடைமையும் எல்லாப் பொருள்களும் இல்லாதவனாவான் என்பதாம். சூதாட்டிலேயே காலங்கழிப்பவனுக்குப் புதுப்பொருள் வராமையாலும் பழம்பொருள் போய் விடுவதாலும், 'ஐந்தும் அடையாவாம்' என்றார். அரசனாயின், அவன் செல்வம், படை, குடி, நாடு, கூழ், அரண், கருவூலம்,உரிமைச்சுற்றம் முதலியனவாம், 'ஒளி', 'கல்வி' முதலியன செய்யுள் நடைநோக்கி முறைமாறி நின்றன, ஆயம் சூதாட்டு. 'ஐந்தும்' முற்றும்மை. சூதாட்டிலேயே காலங்கழிப்பவனுக்குக் கல்வி கற்க நேரமின்மையாலும், ஏற்கனவே கற்றதும் "நூறுநாள் ஓதி ஆறு நாள் விடத்தீரும்", என்ற பழமொழிப்படி மறந்து போமாதலாலும், மறவாத ஒழுக்க நெறிமுறைகளும் கைக்கொள்ளப்படாவாதலாலும், அடையாப் பொருள்களுள் கல்வியும் ஒன்றாகக் கொள்ளப்பட்டது.ஊண்போல் உடையும் இல்லாமற் போவானென்றது பொதுப்பட வறுமை குறித்ததேயன்றி, நளன் நாடிழந்து காடடைந்தபின் ஓதிமத்தை (அன்னத்தை) வளைத்து ஆடையிழந்ததையும், பாண்டவர் தம்மைப் பணையமாக வைத்தாடித் தோற்றுத் தம் மேலாடையிழந்ததையும், குறித்ததன்று.