பக்கம் எண் :

மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி யுணின்.

 

அருந்தியது அற்றது போற்றி உணின் - ஒருவன் தான் முன்னுண்டது செரித்ததைக் குறிகளால் தெளிவாக அறிந்து உண்பானாயின்; யாக்கைக்கு மருந்து என வேண்டாவாம்- அவனுடம்பிற்கு மருந்தென்றே ஒன்றுந் தேவையில்லை.

பெரும்பாலும் நோய்களெல்லாம் செரியாவுணவாலும் பொருந்தாவுணவாலும் மிகையுணவாலுமே நேர்வதால், இது முதல் ஆறு குறள்களில் ஆசிரியர் உணவு நெறிபற்றியே கூறுகின்றார். செரிமானத்தை யறியுங் குறிகள் வயிற்றிற் கனமின்மை, ஏப்பத்தின் செம்மை, இருவகைக் கரணங்களும் தொழில் செய்யத்தகுதியாயிருத்தல், பசியுண்டாதல், உண்டு ஐந்து மணி நேரத்திற்கு மேலாயிருத்தல், என்பன, 'யாக்கை' ஆகுபெயர், எழுவகைத் தாதுக்களால் யாக்கப்பட்டது யாக்கை. யாத்தல் கட்டுதல், 'உணின்' என்பது அதன் அருமையையும் நிலைப்பாட்டையும் உணர்த்திற்று. இக்குறளால் உண்டது செரித்தபின் உண்டால் நோய்வராதென்பது கூறப்பட்டது,

தமிழகத்து  உணவு தொன்றுதொட்டு மருத்துவ முறையிற் சமைக்கப்பட்டு வருகின்றது. பச்சரிசி சூடுண்டாக்குமாதலால் வெப்பநாட்டிற்கேற்காதென்று புழுங்கலரிசி யாக்கப்படுகின்றது.அதைச் சரிதண்ணீர் வைத்துச் சமைத்தல் வேண்டும். சுவை மிகுத்தற்குத் தீட்டும்போது நீக்குந் தவிட்டைத் தனியாகக் கொழுக்கட்டை பிடித்துத் தின்பது வழக்கம். வாழைக்காய் வளிமிகுப்பதென்று பிஞ்சு நிலையிற் சமைக்கப்படும். சீனியவரையென்னுங் கொத்தவரை பித்தமிகுப்பதென்று காய்கட்குப் புளி சேர்க்கப்படும். காயச்சரக்காகக் கூட்டுவனவற்றுள்; மஞ்சள் நெஞ்சுச் சளியை முறிக்கும்; கொத்துமல்லி பித்தத்தை யடிக்கும்; சீரகம் வயிற்றுச் சூட்டைத் தணிக்கும்; மிளகு தொண்டைக்கட்டைத் தொலைக்கும்; பூண்டு வளியகற்றி வயிற்றளைச்சலை நிறுத்திப் பசி மிகுக்கும்; வெங்காயம் குளிர்ச்சியுண்டாக்கிக் குருதியைத் தூய்மைப்படுத்தும்; பெருங்காயம் வளியை வெளியேற்றும்; இஞ்சி பித்தத்தை யொடுக்கிக் காய்ச்சலைக் கண்டிக்கும்; தேங்காய் நீர்க்கோவை யென்னுந் தடுமத்தை(முக்குச் சளியை)நீக்கும்; கறிவேப்பிலை மணமூட்டி உணவு விருப்பையுண்டாக்கும்; கடுகு வயிற்றுவலி வராமற் காக்கும்; நல்லெண்ணெய் கண்குளிர்ச்சியும் மதித்தெளிவும் உண்டாக்கும், இவையெல்லாஞ் சேர்த்த துவரம்பருப்புக் குழம்பும், சீரகம் பூண்டு கலந்த மிளகு நீரும், சூட்டைத்தணித்துச் செரிமான ஆற்றலை மிகுக்கும் மோரும், கூடிய முப்படையற் சோற்றைக் கொழுமைப்படுத்திக் குடற்புண்ணாற்றும் நெய்யோடும் உடலுக்குரஞ்செய்து கழிமாசுக்கட்டை(மலபந்தத்தை) நீக்கும் கீரையொடும்,குளிர்ச்சிதந்து பித்தம்போக்கும் எலுமிச்சை யூறுகாயொடும், அறுசுவைப்பட வுண்ட தமிழன் 'அற்றது போற்றி யுணின்' நோயண்டாதாகலின், 'மருந்தென வேண்டாவாம், என்றார், 'யாக்கைக்கு' என்றது உடம்பைப் பொறுத்தமட்டில் என்றவாறு. உள்ளத்தைத் தாக்கும் நோய் வேறுவகைப் பட்டதாகலின், அதை பின்னர்க் கூறுவார்.