பக்கம் எண் :

தீயன வன்றித் தெரியான் பெரிதுண்ணி
னோயள வன்றிப் படும்.

 

தெரியான் தீ அளவு அன்றிப் பெரிது உண்ணின்- ஒருவன் தன் உடற்கூற்றையும் அதற்கேற்ற வுணவையும் அதையுண்ணுங் காலத்தையும் அறியாது, தான் விரும்பிய வுணவுகளையெல்லாம் விரும்பியபொழுதெல்லாம் தன் பசியளவிற்கு அல்லது செரிமான ஆற்றலுக்கு மேற்பட்டுப் பேரளவாக உண்பானாயின்; நோய் அளவு இன்றிப்படும்- அவனிடத்துப் பல்வகை நோயும் தோன்றி வளரும்.

தெரியாமை வினைக்குச் செயப்படுபொருள்கள் மேற்குறள்களிற் கூறப்பட்டவை. பசியெடுத்தல் தீயெரிதல் போன்றும் உண்டது செரித்தல் தீயால் எரிக்கப் படுதல் போன்றும் இருத்தலால், பசிஅல்லது செரிமான ஆற்றல் வயிற்றுத்தீ யெனப்படும். அவ்வழக்கு நோக்கித் 'தீயளவன்றி' என்றார்."வயிற்றுத் தீத்தணிய' (என்பதுங் காண்க)

"கனல்வாதை வந்தெய்தின்" (தாயு-சச்சிதா.) என்று தாயுமானவரும் கூறுதல் காண்க. 'நோய்' வகுப்பொருமை. இக்குறளால் செரிமான ஆற்றலளவிற்குத் தக்கவாறு உண்ணவேண்டுமென்பது கூறப்பட்டது. 'தெரியான்' எதிர்மறை முற்றெச்சம்.