பக்கம் எண் :

உற்ற னளவும் பிணியளவுங் காலமும்
கற்றான் கருதிச் செயல்.

 

கற்றான்- சித்த மருத்துவத்தைக் கற்றவன்; உற்றான் அளவும் பிணி அளவும் காலமும் கருதிச்செயல்- நோயாளியின் அளவையும் அவனது நோயின் அளவையும் காலத்தின் நிலைமையையும் நோக்கி, அவற்றிற் கேற்றவாறு தன் நூலறிவையும் பட்டறிவையும் பயன்படுத்தி மருத்துவஞ் செய்க.

'உற்றான்' என்றது பிணியுற்றவனே. பின்னாற் பிணியென்று வருகின்றமையின் உற்றானென்று கூறியொழிந்தார். நோயாளியளவு; உடற்கூறு, பருவம், உடல்வலிமை, உளவலிமை ஆகியவற்றின் அளவு. நோயளவு; வன்மை மென்மை யென்னும் தாக்கல் வேறுபாடும், தொடக்கம் இடை முதிர்ச்சி என்னும் நிலை வேறுபாடும், இயல்வது இயலாதது ஐயுறவானது என்னும் நிலைமை வேறுபாடும் முதலியன. காலம்: கோடை மாரி முதலிய பெரும்பொழுது வேறுபாடும், காலை மாலை முதலிய சிறுபொழுது வேறுபாடும், பகல் இரவு என்னும் நாட்பகுதி வேறுபாடும், இயல் திரிவு என்னும் வானிலை வேறுபாடுமாம். இவையெல்லாவற்றையும் எண்ணிச் சமையத்திற்கும் நிலைமைக்கும் ஏற்றவாறு செய்க என்பார் 'கருதிச் செயல்' என்றார்.

'கற்றான்' என்பதற்கு ஆயுள்வேதத்தினைக் கற்ற மருத்துவன் என்றுரைத்ததும், நோயாளியை ஆதுரன் என்றதும், நோய்க்குச் சாத்தியம் அசாத்தியம் யாப்பியம் என்று சாதிவேறுபாடு கூறியதும், பரிமேலழகரின் ஆரியக் குறும்புத் தனத்தையும் வடமொழி வெறியையுங் காட்டுவனவாம்.