பக்கம் எண் :

பணிவுடைய னின்சொல னாத லொருவற்
கணியல்ல மற்றுப் பிற.

 

ஒருவற்கு அணி பணிவு உடையன் இன்சொலன் ஆதல் - ஒருவனுக்கு அணியாவன அடக்கமுடைமையும் இன்சொலுடைமையுமாம் ; பிற அல்ல - மற்ற பொன்னாலும் மணியாலும் செய்யப்பட்ட அணிகள் அணிகளாகா.

பணிவுடைமை இன்முகத்தோடு கூடியதாகலின் இன்சொற்கு உடன் சேர்த்துக் கூறப்படும் இனமாயிற்று . பண்டைக்காலத்தில் ஆடவரும் காதிலும் கழுத்திலும் கையிலும் அணியணிவது பெருவழக்கமாதலின் , 'ஒருவற்கு' என ஆண்பாலாற் குறித்தது தலைமை பற்றியதாகும். அடக்கமுடைமையும் இன்சொலுடைமையும் இருபாற்கும் ஒப்பப் பொதுவேனும் , அணியுடைமை பெண்பாற்குப் போல் ஆண்பாற்குத் தேவையன்று என்பது குறிப்பான் அறியப்படும்.'மற்று' அசைநிலை.