பக்கம் எண் :

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்
றப்பானாற் கூற்றே மருந்து.

 

மருந்து - நோய்க்குச் செய்யும் மருத்துவம்; உற்றவன் - நோயாளி; தீர்ப்பான்- மருத்துவன்; மருந்து- அவனுக்குக் கருவியாகிய மருந்து அல்லது மருத்துவமுறை; உழைச்செல்வான்- அவனுக்குத் துணைவனாயிருந்து நோயாளியிடம் சென்று மருந்து கொடுப்பவன்; என்று அப்பால் நால் கூற்றே- என்ற அப்பகுதிப்பட்ட நான்கு திறத்ததே.

உற்றவன் திறமாவன; நோய்நிலை யுணர்த்தல்; மருத்துவன் சொற்கடைப்பிடித்தல், பொருளீதல், மருத்துவத்துன்பம் பொறுத்தல் என்பன. நோய் தீர்ப்பான் திறமாவன. நோயாளியிடத் திரக்கமுடைமை, நோய் நீக்குங் குறிக்கோளுடைமை, பரந்த மருத்துவக் கல்வி, மதிநுட்பம், நீடிய பட்டறிவு, பேராசையின்மை என்பன. இவற்றுள் பட்டறிவின் இன்றியமையாமை "இளங்கணியன் முது மருத்துவன்," ("வாலிப சோதிடன் வயோதிக வைத்தியன்.") "ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை மருத்துவன்" " ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை மருத்துவன்" என்பவற்றால் அறியப்படும். ஆயிரம் வேர் என்றது வேரின் வகையையே யன்றித் தொகையை யன்று, "நோயாளி ஊழாளி(விதியாளி) யானால் மருத்துவன்(பரிகாரி) பேராளி." ஆதலால், ஆயிரம்பேரைக் கொன்றவன் என்பதாற் பெரிதும் இழுக்கும் இழிவும் இல்லையென்க. மருந்தின் திறமாவன. உடற் கூற்றோடொத்தல்,ஊறு செய்யாமை, ஆற்றலுடைமை, எளிதிற் பெறப்படுதல் என்பன. உழைச்செல்வான் திறமாவன; மருத்துவன் சொன்ன வண்ணஞ் செய்யுந் திறமை, நோயாளியிடத் தன்புடைமை, இன்சொலனாயிருத்தல், உண்மையுடைமை என்பன. இவையெல்லாங் கூடியவழி யல்லது நோய் தீராமையின். 'அப்பானாற் கூற்றே மருந்து' என்று தேற்றேகாரங்கொடுத்துக் கூறினார். 'உற்றவன்' 'தீர்ப்பான்' என்னும் இரண்டிற்கு முரிய செயப்படு பொருள் முந்திய குறளினின்று வந்தது. உழைச்செல்வான் மருந்துகொடுப்பனாக மட்டுமன்றிச் செய்பவனாகவுமிருந்தால், மேலை முறை மருத்துவமனையிலுள் கலக்கு நரினும் (Compounder) மருத்துவ அறிவாற்றலிற் சிறந்தவனாவன்.

'அப்பானாற் கூற்று' என்பதற்கு "நான்கு பகுதியையுடைய நான்கு திறத்தது," என்று உரையும்,"நான் கென்னுமெண் வருகின்றமையின், அது நோக்கி 'அப்பா' லென்றொழிந்தார்.' என்று சிறப்பும் கூறினார் பரிமேலழகர். அது பொருந்தாமை,

"அவற்றுள்
அ இ உ எ ஒ என்னும்
அப்பா லைந்தும் ஓரள பிசைக்குங் குற்றெழத் தென்ப."

(3)

" ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஓள என்னும்
அப்பா லேழும்
ஈரள பிசைக்கும் நெட்டெழத்தென்ப,"

(4)

என்னும் தொல்காப்பிய நூற்பா யாப்பை நோக்கி யுணர்க. இனி இவ்வதிகாரம் முழுதும் ஆயுள்வேதம் என்னும் ஆரிய மருத்துவ நூன்முறையைத் தழுவியதாகப் பரிமேலழகர் ஆங்காங்கு உரைத்திருப்பது, உண்மைக்கு நேர்மாறாம்; ஆரியர் வருமுன் வடநாவலத்திலும் பனிமலைவரை தமிழரும் திரவிடருமே மிகுதியாய்ப் பரவியிருந்தனரென்றும், வடநாட்டுச் சித்த மருத்துவமே பிற்காலத்தில் ஆயுள் வேதமெனப் பெயர் மாற்றப்பட்ட தென்றும், இது பழந்தமிழிசையே இன்று பாகுபாடும் குறியீடுகளும் மாற்றப்பட்டுக் கருநாடக சங்கீதம் என வழங்குவது போன்ற தென்றும், அறிந்துகொள்க.

(உறுப்பியல் நட்புப்பகுதி முற்றிற்று)