பக்கம் எண் :

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பிற் றலைப்பிரித லின்று.

 

பழங்குடி - தொன்று தொட்டு வருகின்ற நற்குடியிற் பிறந்தார்; வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும்- தாம் கொடுக்கும் பொருள் சுருங்கிப்போன விடத்தும்; பண்பின் தலைப்பிரிதல் இன்று - தம் கொடுக்குந் தன்மையினின்று நீங்குதல் இல்லை.

கொடைத்தன்மை தலைமுறை தோறும் ஆழவேருன்றுதலால், பழங்குடிக்கு அது நீங்காத பிறவிக் குணமாய்ப் போய்விடுமென்பது கருத்து. உம்மை இறந்தது தழுவிய எச்சம். "தொன்று தொட்டு வருதல் சேரசோழ பாண்டிய ரென்றாற்போலப் படைப்புக்காலந் தொடங்கி மேம்பட்டு வருதல், என்று பரிமேலழகர் உரைத்திருப்பது பாராட்டத்தக்கது.

"ஆற்றுப் பெருக்கற் றடிசுடு மந்நாளும்
ஊற்றுப் பெருக்கா லுலகூட்டும் - ஏற்றதொரு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தா ரானாலும்
இல்லை யெனமாட்டா ரிசைந்து." (நல்வழி-6)