பக்கம் எண் :

அல்லவை தேய வறம்பெருகு நல்லவை
நாடி யினிய சொலின் .

 

நல்லவை நாடி இனிய சொலின் - விளைவாற் பிறர்க்கு நன்மை பயக்குஞ் சொற்களை ஆராய்ந்தறிந்து அவற்றைச் செவிக்கினிதாக ஒருவன் சொல்வானாயின் ; அல்லவை தேய அறம் பெருகும் - அவனுக்குத் தீவினைப் பயன் குன்ற நல்வினைப் பயன் வளரும் .

அறம் நல்வினை ; இங்கு அதன் பயனைக் குறித்தது . அறமல்லாதவை தீவினைகள் . தீவினைகள் தேய்தலாவது தீவினைப் பயன் குன்றல் . நல்வினையும் தீவினையும் ஒளியும் இருளும் போல மறுதலைப் பொருள்களாதலின் , ஒளியின் முன் இருள் கெடுதல் போல நல்வினைப் பயன் முன் தீவினைப் பயன் கெடுமென்றார் . நல்லவற்றைச் சொன்னாலும் அறமாகுமேனும் , அவற்றைக் கடுமையாகச் சொல்லின் கேட்பார் மனம் வருந்தி அவ்வறங் கெடுதலால் , நல்லவற்றையும் இனிதாகச் சொன்னாலன்றி அறமாகாதென்றார் . இதனால் இன்சொல்லின் அறத்தன்மை வலியுறுத்தப் பெற்றது .