பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்-குடி

அதிகாரம் 97. மானம்

அஃதாவது , உயர்குடிப் பிறப்பிற்குரிய பண்புகளுள் ஒன்றானதன் மதிப்பு. அது ஒருபோதுந் தன் நிலைமையினின்று தாழாமையும் தெய்வத்தால் தாழ்வு வந்தவி்டத்து வாழாமையுமாம். இது உயர் குடிப் பண்புகட்கு அடிப்படையாதலின் முற்கூறப்பட்டது.

 

இன்றிய மையாச் சிறப்பின வாயினுங்
குன்ற வருப விடல்.

 

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் - செய்யாத விடத்துத் தாம் வாழ முடியாத அளவு முதன்மை வாய்ந்தன வெனினும்; குன்ற வருப விடல் - தம் குடிப்பிறப்புத் தாழ்வதற் கேதுவான இழிசெயல்களைச் செய்யா தொழிக.

அமையாமை உயிரொடு பொருந்தாமை; அஃதாவது, இறத்தல், குடிப்பிறப்பு என்பது அதிகார முறையால் வந்தது. "இறப்ப வருவழி இளிவந்தன செய்தாயினும் உய்க வென்னும் வடநூன் முறைமையை மறுத்து, உடம்பினது நிலையின்மையையும் மானத்தினது நிலையுடைமையையும் தூக்கி, அவை செய்யற்க வென்பதாம்." என்று பரிமேலழகர் இங்குக் கூறியிருப்பது பாராட்டத்தக்கதாம். அந்த  அளவிற்கு வள்ளுவர் தமிழவறம் வடவர் ஆரிய வறத்தை வென்றிருப்பது கவனிக்கத் தக்கது. உம்மை உயர்வு சிறப்பு.