பக்கம் எண் :

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டு முயர்வு.

 

பெருக்கத்துப் பணிதல் வேண்டும்- குடிப் பிறந்தார்க்கும் தன்மானியர்க்கும் பெருமை நிறைதற்கேற்ற செல்வக் காலத்தில் யாவரிடத்தும் தாழ்மையாயிருத்தல் வேண்டும்; சிறிய சுருக்கத்து உயர்வு வேண்டும் - பெருமை குறைதற் கேதுவான வறுமைக் காலத்தில், அக்குறையை நிறைத்தற் பொருட்டுத் தாழ்மையில்லாதிருத்தல் வேண்டும்.

"எல்லார்க்கும் நன்றாம் பணித லவருள்ளுஞ்
செல்வர்க்கே செல்வந் தகைத்து."

(குறள் 125)

"நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்."

ஆதலால், செல்வக் காலத்தில் தாழ்மையும் மேன்மையைத் தருதலையும் வறுமைக் காலத்தில் தாழ்மை தாழ்வையே தருதலையும் நோக்கி, பெருக்கத்துப் பணிவும் சுருக்கத்து உயர்வும் வேண்டும் என்றார். இங்குப் பணியாமை யென்றது செருக்கற்ற தன்மான நிலையை. தன் மானியார் என்று தனிப்படக் குறித்தது குடிப்பிறப் பின்றியும் கல்வி யொழுக்கங்களால் மேம்பட்டுத் தன்மானங் காப்பவரை. இம் முன்று குறளாலும் மானங்காக்கும் வழிகள் கூறப்பட்டன.