பக்கம் எண் :

புகழின்றாற் புத்தேணாட் டுய்யாதா லென்மற்
றிகழ்வார்பின் சென்று நிலை.

 

இகழ்வார்பின் சென்று நிலை - ஒருவன் தன்மான மின்றித் தன்னை அவமதிப்பார் பின்னே சென்று நிற்கின்ற நிலை; புகழ் இன்று - இவ்வுலகத்து நிற்கும் புகழைத் தராது; புத்தேள் நாட்டு உய்யாது - மறுமையில் தேவருலகத்திற்குச் செலுத்தாது;மற்று என் - இனி அது அவனுக்கு வேறு என்ன பயனைச் செய்யும்?

'மற்று' பிறிதுப் பொருளிடைச் சொல். 'ஆல்' ஈரிடத்தும் அசைநிலை. இம் மூன்று குறளாலும் மானம் பேணாமையின் இழிபு கூறப்பட்டது.