பக்கம் எண் :

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலினந்நிலையே
கெட்டா னெனப்படுத னன்று.

 

ஒருவன் ஒட்டார் பின் சென்று வாழ்தலின் - ஒருவன் தன்னை யிகழ்வார் பின் சென்று அவர் தரும் பொருள் பெற்று அதனால் உயிர் வாழ்தலினும் ; அந் நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று- தான் பொருளற்ற அப்பொழுதே உயிர் துறந்தான் அல்லது இறந்தான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நன்றாகும்.

ஒட்டுதல் உள்ளத்தாற் பொருந்துதல். அந்நிலை யென்றது ஒட்டார்பின் செல்லாத முன்னை நிலையை. ஏகாரம் பிரி நிலை. புகழும் புத்தேணாடும் பெறாவிடினும் பொருள்பெற்று வாழலாமே யெனின், அங்ஙனம் மானங் கெட்டு வாழ்வதினும் மானங்காத்து மாள்வதே சிறந்த தென்றுகூறியவாறு.