பக்கம் எண் :

மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த விடத்து.

 

பெருந்தகைமை பீடு அழிய வந்த விடத்து - உயர்குடிப்பிறப்புத் தன் பெருமிதமாகிய மானங்கெட வந்தவிடத்து; ஊன் ஓம்பும் வாழ்க்கை மற்று மருந்தோ - இறவாது நின்று இகழ்வாரை வேண்டிப் பொருள் பெற்று இழிந்தவுடம்பைக் காக்கும் வாழ்க்கை பின்பும் இறவாமலிருத்தற்கு மருந்தாகுமோ! ஆகாதே!

உயர் குணங்கட்கு இடமாதல்பற்றி உயர்குடிப்பிறப்பைப் 'பெருந்தகைமை' யென்றும், அப்பிறப்பிற்குப் பெருமிதத்தைத் தரும் மானத்தைப் 'பீடு' என்றும். அ ஃதழிந்தபின் உடம்பைப் பேணுதல் இழிந்ததாதலின் அதனை 'ஊனோம்பும் வாழ்க்கை' யென்றும், பின்னும், இறத்தல் உறுதியாகலின் 'மருந்தோ' என்றும் கூறினார். 'மற்று' பின்மைப் பொருளிடைச் சொல்.