பக்கம் எண் :

பொருட்பால்
உறுப்பியல்-குடி

அதிகாரம் 98. பெருமை.

அஃதாவது,அறிவாற்ற லொழுக்கங்களால் மக்கள் அல்லது குடிகள் அடையக்கூடிய உயர்வு; படிப்படியாக மேன்மேலுயரக் கூடிய நிலைமை மானத்தின் வழிப்பட்டதாகையால், இஃது அதன் பின் வைக்கப்பட்டது.

 

ஒளியொருவற் குள்ள வெறுக்கை யிளியொருவற்
கஃதிறந்து வாழ்து மெனல்.

 

ஒருவற்கு ஒளி உள்ள வெறுக்கை - ஒருவனைச் சிறப்பித்து அவன் பெயரை விளங்கச் செய்யும் பெருமை, பிறராற் செயற்கரிய செய்வேம் என்னும் ஊக்க மிகுதியால் ஏற்படுவதே; ஒருவற்கு இளி அஃது இறந்து வாழ்தும் எனல் - ஒருவனுக்கு இழிவாவது, அவ்வருஞ்செயலும் அதற்கேதுவான ஊக்கமுமின்றி எளிதாய் வாழக்கடவோம் என்றெண்ணுவதே.

ஒருவன் பெயரை விளங்கச் செய்வதால் அவன் பெருமையை 'ஒளி' என்றும், அப்பெருமைக்குக் காரணமாகிய அருஞ்செயற்கு ஏதுவான ஊக்கமிகுதியை அதன் மும்மடிக் கருமியமாகிய ஒளியொடு சார்த்தியும் கூறினார். ஒளி,இளி என்பன இங்கு ஒன்றிற்கொன்று எதிராகவந்த சொற்கள் "செயற்கரிய" என்று முற்கூறியது (குறள். 26) துறவு பற்றிய தென்றும், இங்குக் கொள்வது புரவு பற்றிய தென்றும்,வேறுபாடறிக. வெறுக்கை- செல்வம். அது இங்கு மிகுதியைக் குறித்தது. வெறுத்தல் செறிதல், புரவு பற்றிய அருவினைகள் ஈகையும் ஒப்பரவும், 'வாழ்தல்' என்னும் பன்மை நெஞ்சோடு கிளத்தல்பற்றிய எண் வழுவமைதி, இக்குறளாற் பெருமைக்கு ஏது கூறப்பட்டது.