பக்கம் எண் :

மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்
கீழல்லார் கீழல் லவர்.

 

மேல் அல்லார் மேல் இருந்தும் மேல் அல்லர் - பிறப்பொடு தொடர்புள்ள ஆரியக் குலப் பிரிவினையால் ஏற்பட்ட குமுகாயப் படிமுறை யொழுங்கில், பிராமணர் என்னும் ஆரியப் பார்ப்பனர் உச்சியிலிருந்தும், ஒழுக்கங் கெட்டவராயின் உயர்ந்தோரல்லர்; கீழ் அல்லவர் கீழ் இருந்தும் கீழ் அல்லார்- உண்மையாகத்தாழ்ந்தவ ரல்லாத தென்னாட்டுத் தொல்குடித் தமிழர், பிராமணரால் தாழ்த்தப்பட்டிருப்பினும் தாழ்ந்தவராகார்.

"மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்."

என்று முன்பும்(குறள் .134.),

"பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்"

என்று இங்கும் ஆசிரியர் கூறியிருப்பதால், "செயற்கரிய செய்கலாது சிறியராயினார், உயர்ந்த வமளி முதலியவற்றின் மிசையிருந்தாராயினும், பெரியராகார். அவை செய்து பெரியராகார் தாழ்ந்த வறுநிலத்திலிருந்தாராயினும், சிறியராகார்.

'மேலிருத்தல் கீழிருத்தல்களாற் செல்வ நல்குரவுகளும் கருதப்பட்டன' என்று பரிமேலழகர் உரைத்திருப்பது பொருந்தாது, இதிலுள்ள அணிசொற்பொருள் பின்வருநிலை. இவ்விரு குறளாலும் பிறப்பாற் சிறப்பில்லை யென்பது கூறப்பட்டது.