பக்கம் எண் :

அன்புநா ணொப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ
டைந்துசால் பூன்றிய தூண்.

 

அன்பு - எல்லார் மேலுமுள்ள அன்பும், நாண் - பழி தீவினைகள் செய்யப் பின்வாங்கும் நாணமும் , ஒப்புரவு - வேளாண்மையும் ; கண்ணோட்டம் - எளியார்க்கும் சட்ட நெறியறியார்க்குங் காட்டுஞ் சிறப்பிரக்கமும் ; வாய்மையொடு - உண்மை யுடைமையும் என; சால்பு ஊன்றிய தூண் ஐந்து - சான்றாண்மையென்னும் மண்டபத்தைத் தாங்குந் தூண்கள் ஐந்தாம்.

"என்றும் எனவும் ஒடுவுந் தோன்றி
ஒன்றுவழி யுடைய எண்ணினுட் பிரிந்தே,"

என்னும் தொல்காப்பிய நூற்பாப்படி (779), எண்ணோடு முன்னவற்றொடும் ஒன்றியது, இவ்வைங்குணமும் இல்லாவிடத்துச் சால்பு நில்லாமையின், இவற்றைத் தூணென வுருவகித்தார். சால்பை மண்டபமென வுருவகியாமையின் , இது ஒருமருங்குருவகம். இங்கு எளியார் என்றது செல்வம்,கல்வி, உடல்வலிமை, அகவை முதலிய பலவகையிலுந் தாழ்ந்தவரை.