பக்கம் எண் :

இன்னாசெய் தார்க்கு மினியவே செய்யாக்கா
லென்ன பயத்ததோ சால்பு.

 

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் - தமக்குத் தீயன செய்தவர்க்கும் நல்லனவே செய்யாவிடின்; சால்பு என்ன பயத்தது - ஒருவரின் சான்றாண்மையால் என்ன பயனாம் ?

வினா எதிர்மறைப் பொருளது, 'ஒ' இரக்கங் குறித்த அசைநிலை. உம்மை இழிவு சிறப்பு. ஏகாரம் பிரிநிலை, சால்பில்லார் போன்றே சால்புடையாரும் நன்மைக்கு நன்மையும் தீமைக்குத் தீமையுஞ் செய்வராயின், அவர் சால்பினால் ஒரு பயனுமில்லை யென்பதாம். இவ்வைங் குறளாலும் சால்பின் தன்மை சிறப்பு வகையாற் கூறப்பட்டது.