பக்கம் எண் :

உறுப்பொத்தன் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்த லொப்பதா மொப்பு.

 

உறப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்று - உயிரொடு பொருந்தாத முகவுறுப்பால் அல்லது முழுவுடம்பால் ஒத்திருப்பது ஒருவனுக்கு நன்மக்களை ஒக்கும் ஒப்பாகாது; வெறுத்தக்க பண்பு ஒத்தல் ஒப்பது ஆம் ஒப்பு- உயிரொடு பொருந்தத்தக்க பண்பினால் ஒத்தலே உண்மையாக ஒக்கும் ஒப்பாம், 'ஆல்' அசைநிலை.

மக்கள் என்னும் சொல், தொல்காப்பியக் கொள்கைப் படியும் ஆசிரியர் கருத்துப்படியும், மாந்தருள் உயர்ந்தோரையே இங்குக் குறித்தது. மாந்தருடம்பை ஒப்புநோக்குவது பெரும்பாலும் முகமும் முகவுறுப்புங்கொண்டே யாதலால், 'உறுப்பொத்தல்' என்றார், வெறுத்தல் செறிதல் அல்லது பொருந்துதல். உடம்பும் உறுப்பும் போலாது, உயிரும் உள்ளமும் அவற்றின் பண்பும் ஒருவரிடத்தும் பலரிடத்தும் ஒன்றிப் பொருந்தும் தன்மையனவாதலால், 'வெறுத்தக்க பண்பு' என்றார், உறுப்பும் உடம்பும் உயிரின் வேறாயிருத்தலொடு. பிறப்பில், இயற்கையாய் அமைந்தனவும் வாழ்நாள் முழுதும் மாறாதனவும், சேதப்படத்தக்கனவும், அறிவில்லாதனவும், உயிர்நீங்கியபின் மண்ணாக மாறுவனவுமா யிருத்தலின், அவற்றாலொத்தலால் ஒரு சிறப்பும் பயனுமின்றாம். ஆகவே மக்களைப் பின்பற்றிப் பண்பாலேயே அவரையொத்துப் பிறரும் மக்களாக வேண்டுமென்பது கருத்து. இக்குறளில் உள்ளது சொற்பொருட்பின்வருநிலை "வடநூலார் அங்கமென்றமையின் உறுப்பென்றார்." என்னும் பரிமேலழகர் கூற்று ஆரியக் குறும்பே.