பக்கம் எண் :

திருக்குறள்183பொருள்

92. வரைவின் மகளிர்
 

911.

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்

இன்சொல் இழுக்குத் தரும்.
 

அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட
பொதுமகளிர்   இனிமையாகப்   பேசுவதை   நம்பி  ஏமாறுகிறவர்களுக்கு
இறுதியில் துன்பமே வந்து சேரும்.
 

912.

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்

நயன்தூக்கி நள்ளா விடல்.
 

ஆதாயத்தைக்   கணக்கிட்டு   அதற்கேற்றவாறு   பாகு  மொழிபேசும்
பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது.
 

913.

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்

ஏதில் பிணந்தழீஇ அற்று.
 

விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு
காட்டி  நடிப்பது, இருட்டறையில்  ஓர்  அந்நியப்  பிணத்தை அணைத்துக்
கிடப்பது போன்றதாகும்.
 

914.

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்

ஆயும் அறிவி னவர்.
 

அருளை   விரும்பி   ஆராய்ந்திடும்   அறிவுடையவர்கள்  பொருளை
மட்டுமே   விரும்பும்   விலைமகளிரின்   இன்பத்தை     இழிவானதாகக்
கருதுவார்கள்.
 

915.

பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்

மாண்ட அறிவி னவர்.
 

இயற்கையறிவும்   மேலும்   கற்றுணர்ந்த   அறிவும்   கொண்டவர்கள்
பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்.