பக்கம் எண் :

திருக்குறள்185பொருள்

93. கள்ளுண்ணாமை
 

921.

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்

கட்காதல் கொண்டொழுகு வார்.
 

மதுப்  பழக்கத்திற்கு  அடிமையானவர்கள்  தமது  சிறப்பை  இழப்பது
மட்டுமல்ல, மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.
 

922.

உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்

எண்ணப் படவேண்டா தார்.
 

மது   அருந்தக்   கூடாது;  சான்றோர்களின்  நன்  மதிப்பைப்  பெற
விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.
 

923.

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

சான்றோர் முகத்துக் களி.
 

கள்ளருந்தி மயங்கிடும்  தன் மகனை,  அவன் குற்றங்களை மன்னிக்கக்
கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள்
அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.
 

924.

நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்

பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
 

மது     மயக்கம்    எனும்     வெறுக்கத்தக்க    பெருங்குற்றத்திற்கு
ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று  சொல்லப்படும்  நற்பண்பு
நிற்காமல் ஓடிவிடும்.
 

925.

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து

மெய்யறி யாமை கொளல்.
 

ஒருவன்   தன்னிலை   மறந்து   மயங்கியிருப்பதற்காகப்,   போதைப்
பொருளை   விலை   கொடுத்து    வாங்குதல்   விவரிக்கவே   முடியாத
மூடத்தனமாகும்.