பக்கம் எண் :

நட்பியல்186கலைஞர் உரை

926.

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
 

மது   அருந்துவோர்க்கும்    நஞ்சு   அருந்துவோர்க்கும்   வேறுபாடு
கிடையாது என்பதால்  அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட
வேறுபாடு கிடையாது என்று கூறலாம்.
 

927.

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்

கள்ளொற்றிக் கண்சாய் பவர்.
 

மறைந்திருந்து  மதுவருந்தினாலும்   மறைக்க  முடியாமல்  அவர்களது
கண்கள்  சுழன்று மயங்குவதைக்  கண்டு  ஊரார்  எள்ளி நகையாடத்தான்
செய்வார்கள்.
 

928.

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்

தொளித்ததூஉம் ஆங்கே மிகும்.
 

மது அருந்துவதே  இல்லை  என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது;
காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும்  போது  அந்த உண்மையைச்
சொல்லி விடுவான்.
 

929.

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
 

குடிபோதைக்கு   அடிமையாகி   விட்டவனைத்   திருத்த   அறிவுரை
கூறுவதும்,   தண்ணீருக்குள்   மூழ்கிவிட்டவனைத்   தேடிக்கண்டுபிடிக்கத்
தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.
 

930.

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்

உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
 

ஒரு குடிகாரன், தான் குடிக்காமல்  இருக்கும்போது மற்றொரு குடிகாரன்
மது மயக்கத்தில்  தள்ளாடுவதைப் பார்த்த  பிறகாவது  அதன் கேட்டினை
எண்ணிப் பார்க்க மாட்டானா?