பக்கம் எண் :

நட்பியல்190கலைஞர் உரை

946.

இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபேர் இரையான்கண் நோய்.
 

அளவோடு  உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர்
நோய்க்கு ஆளாவதும் இயற்கை.
 

947.

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

நோயள வின்றிப் படும்.
 

பசியின்  அளவு   அறியாமலும்,  ஆராயாமலும்  அதிகம்   உண்டால்
நோய்களும் அளவின்றி வரும்.
 

948.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.
 

நோய் என்ன? நோய்க்கான  காரணம்  என்ன?  நோய்  தீர்க்கும் வழி
என்ன?  இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்யவேண்டும். (உடல்
நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).
 

949.

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல்.
 

நோயாளியின்  வயது, நோயின்  தன்மை,  மருத்துவம்  செய்வதற்குரிய
நேரம்  என்பனவற்றை  எல்லாம்  மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே
செயல்பட வேண்டும்.
 

950.

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்

றப்பானாற் கூற்றே மருந்து.
 

நோயாளி,   மருத்துவர்,  மருந்து, அருகிருந்து  துணைபுரிபவர்   என
மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.