பக்கம் எண் :

துறவறவியல்70கலைஞர் உரை

346.

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்

குயர்ந்த உலகம் புகும்.

 

யான்,  எனது  என்கின்ற  ஆணவத்தை  அறவே  விலக்கி விட்டவன்,
வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்.
 

347.

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்

பற்றி விடாஅ தவர்க்கு.

 

பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும்  விடாமல்
பற்றிக் கொள்கின்றன.
 

348.

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி

வலைப்பட்டார் மற்றை யவர்.

 

அரைகுறையாக   இல்லாமல்   அனைத்தும்  துறந்தவர்களே  உயர்ந்த
நிலையை  அடைவார்கள்: அவ்வாறு  துறவாதவர்கள்  அறியாமையென்னும்
வலையில் சிக்கியவர்களாவார்கள்.
 

349.

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

நிலையாமை காணப் படும்.

 

பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும்   இன்ப   துன்பங்கள்
வருவதில்லை. இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய
நிலையாமை தோன்றும்.
 

350.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு.

 

எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக்
கொள்ள வேண்டும். துறவறத்தினர் தம்  பற்றுகளை    விட்டொழிப்பதற்கு
அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்.