பக்கம் எண் :

114
 

2. பொருட்பால்

[இது பொருளை உணர்த்தும் பகுதி; அறத்தைப்போல் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றற்கும் நேரே காரணமாதலின்றித், துய்த்தலானும் வழங்குதலானும் முறையே இம்மை மறுமை இரண்டற்குமட்டும் ஓராற்றால் காரணமாதல்பற்றி, இப் பொருட்பால் அறத்துப்பாலை அடுத்து நின்றது.]

14. கல்வி

[கற்றற்குரிய நூல்களைக் கற்றல், பொருளைத் தேடுதற்கும் தேடிய பொருளைப் பயன்படுத்துதற்கும் கல்வி காரணமாதலின் இது பொருட்பாலின்கண் அமைந்தது.]

131. குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.

(பொ-ள்.)குஞ்சி அழகும் கொடு தானைக் கோடு அழகும் மஞ்சள் அழகும் அழகு அல்ல - மயிர்முடியின் அழகும் வளைத்து உடுக்கப்படும் ஆடையின் கரையழகும் மஞ்சட் பூச்சின் அழகும் மக்கட்கு முடிந்த அழகுகள் அல்ல; நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் நடுவுநிலைமையால் கல்வி அழகே அழகு - நாம் நல்லமாக ஒழுகுகின்றோம் என்று தம் மனம் அறிய உண்மையாக உணரும் ஒழுக்கத்தைப் பயத்தலால் மக்கட்குக் கல்வியழகே உயர்ந்த அழகாகும்.

(க-து.)நல்லொழுக்கம் பயக்கும் கல்வியே மக்கட்கு உயர்வான அழகாகும்.

(வி-ம்.)குஞ்சி, ஆடவர் தலை மயிர்முடி; மஞ்சள், சிறப்பாக மகளிர் பூசிக் கொள்ளும் மஞ்சள் நிறமான மணப்பூச்சு; தானை இருபாலார் ஆடைக்கும் ஒக்கும்; ஆதலின், இச்செய்யுள் பொதுவாக மக்கட்குரிய கல்வியழகை உணர்த்திற்றென்க. "நடை வனப்பும் நாணின் வனப்பும் வனப்பல்ல, எண்ணோ டெழுத்தின் வனப்ப வனப்பு"1எனப் பெண்பாலாரையும் உட்கொண்டு பிறரும் அறிவுறுப்பர்.


1. ஏலாதி. 75.