பக்கம் எண் :

115
 

‘குஞ்சி' முதலியன இலக்கணையால் பிற அழகுகளையும் உட்கொண்டன. நெஞ்சத்து என்றார், மனமறிய என்றற்கு; நடுநிலைமையா லென்றார். உண்மையாக உணரும் என்றற்கு. ‘யாம் நல்லம்' என்றது, தலைமைபற்றி வந்த தன்மைப் பன்மை.

(1)

132. இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.

(பொ-ள்.)இம்மை பயக்கும் - நல்வாழ்க்கையாகிய இம்மைப்பயனை விளைவிக்கும்; ஈயக் குறைவு இன்று - பிறர்க்குக் கற்பித்தலால் குறைவுபடுதல் இல்லை; தம்மை விளக்கும் - தம்மை அறிவாலும் புகழாலும் விளங்கச் செய்யும்; தாம் உளராக் கேடு இன்று ஆல் - தாம் இருக்க அது கெடுதல் இல்லை ஆதலால், எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து - எப்பிறவியின் உலகத்திலும் கல்விபோல் அறியாமை மயக்கத்தைத் தீர்க்கும் மருந்தை யாம் காண்கின்றிலேம்.

(க-து.)கல்வியே, எல்லா வாழ்க்கை யின்னல்கட்குங் காரணமான அறியாமையாகிய மயக்கத்தைத் தீர்க்கும்.

(வி-ம்.)ஆல் காரணப் பொருட்டால் ஒவ்வொன்றனோடும் வந்தது. ஈதல் - ஈண்டுக் கற்பித்தல், மக்கள் பல நாள் உள்ளவராகச் செல்வம் அதற்கு முன்னரே கெட்டொழிதலும் உண்டாதல் போலக் கல்வி கெடுதல் இல்லையென்றற்குத் ‘தாம் உளராக் கேடு இன்று' எனப்பட்டது. தேவருலகத்து அமிழ்தமும் உடற் பிணியை நீக்குமன்றி உயிர்ப்பிணியாகிய மருட்சியைத் தீர்க்காதாதலின் ‘எம்மை யுலகத்துங் காணேம்' என்றார். அறத்தீர்க்கும் என்றற்கு அறுக்கும் என வந்தது; "துயரங்கள் அண்டா வண்ணம் அறுப்பான்"1என்புழிப்போல.

(2)


1. தேவா, 50:1.