பக்கம் எண் :

1

பழமொழி நானூறு

தற்சிறப்புப்பாயிரம்

பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப்
பண்டைப் பழமொழி நானூறும் - கொண்டினிதா
முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான்
இன்றுறை வெண்பா இவை.

(சொற்பொருள்.) பிண்டியின் நீழல் பெருமான் அடி வணங்கி - அசோக மரத்து நீழலில் எழுந்தருளியிருக்கும் அருகக் கடவுளின் திருவடிகளைத் தொழுது, பண்டைப் பழமொழி நானூறும் கொண்டு - பழைய பழமொழிகள் நானூறுந் தழுவி, முன்றுறை மன்னன் - முன்றுறை யரசர், இன்துறை வெண்பா இவை - இனிய பொருட்டுறைகள் அமைந்த வெண்பாக்களாகிய இந்நூற் பாட்டுக்களின், நான்கடியும் இனிதா(க)- நான்கு அடிகளையும் சுவைதோன்ற, செய்தமைத்தான் -யாத்தமைத்தார்.

(கருத்து.) இறைவனை வணங்கி,இப் பழமொழி நானூறும் பாடப் பெற்றன.

(விளக்கம்.) பிண்டியின் நீழற் பெருமானை வழுத்துவதால் ஆசிரியர் சைன சமயத்தினர் என்பது தெளிவு. பண்டைப் பழமொழிகொண்டு என்றது, முன்பு உலக வழக்கில் வழங்கி வந்த பழமொழிகளின் கருத்துக்களைத் தழுவி என்பதற்கு. ‘இவை நான்கடியும் செய்தமைத்தான்' என்று கூட்டிக்கொள்க; இனிய பொருட்டுறைகளாவன : அறம், பொருள், இன்பம், வீடு என்றவற்றின் கூறுபாடுகள். இந்நூலாசிரியரான முன்றுறையரையனாரே இப்பாயிரமும் இயற்றினா ரென்பாரு முளர்.