5செய்யாமை மேற்கோள் சிதடியிற் றுவ்வாது.

(ப-பொ.) செய்யத்தகாதனவற்றை மேற்கொண்டு செய்யத் தொடங்குவது மையற்றன்மையின் நீங்கி யொழியாது.

(ப-ரை.) செய்யாமை - தாம் செய்யத்தகாத காரியங்களை, மேற்கோள் - செய்வோமென்று மேற்கொள்வது, சிதடியின் - மூடத்தன்மையின், துவ்வாது - நீங்கி யொழியாது.

செய்யத்தகாத காரியங்களைச் செய்வதாகமேற்கொண்டு தொடங்குவது மூடத்தன்மையின் வேறாகாது.

'செய்தக்க வல்ல செயக்கெடும் : செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.'

'பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.'

- திருக்குறள்.

சிதடி - (சிதடு - பேதைமை) - அறிவிலி. 'சிக்கர் சிதடர்' எனச் சிறுபஞ்சமூலத்தில் வருகின்றது.