7சிறுமைநோ னாதோன் பெருமைவேண்டல் பொய்.

(ப-பொ.) பிறர்க்குத் தான்செய்யும் பணிவினைப் பொறாதோன் தனக்குப் பெருமை வேண்டுதல் பொய்.

பிறர் தனக்குச் செய்யும் பணிவினைப்பொறாதோன் என்று பாடபேதம் உண்டு.

(ப-ரை.) சிறுமை - அடக்கத்தை, நோனாதோன் - அனுசரிக்கப் பொறாதவன், பெருமை - பெருமையை, வேண்டல் - வேண்டுதல், பொய் - பொய்யாம்.

நோன்றல் - பொறுத்தல் (இதற்கு எதிர்மறை நோனாமை) : உற்ற நோய் நோன்றல்' (திருக்குறள்) என வருகின்றது.

பெருமையை விரும்புகின்றவன் பிறரிடம் பணிவாக அடங்கி நடப்பான். 'பெருமை பெருமித மின்மை' என்றது திருக்குறள்.