1
8. எளிய பத்து.

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்.
புகழ்வெய் யோர்க்குப் புத்தேணா டெளிது.

(ப-பொ.) ஆர்கலியாற் சூழப்பட்ட உலகத்து மக்களெல்லாருள்ளும், ஒருவர்க்குப் புகழ் விரும்பின் கடவுளர் வாழுபெறுதல் எளிது.

(ப-ரை.) ஆர்கலி உலகத்து - கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட்கெல்லாம் - மக்கள் எல்லாருள்ளும், புகழ் - கீர்த்தியை, வெய்யோர்க்கு - விரும்பினோர்க்கு, புத்தேள்நாடு - தேவலோக மடைதல், எளிது -எளிதாம்.

புகழை விரும்பி அறஞ்செய்தாரைத் தேவர்கள் தாமே வந்து உபசரித் தழைத்துப்போவர்.ஆதலால் அறஞ்செய்தார் சுவர்க்கம் புகுதல் எளிதேஎன்பதாம்.

'புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவ னேவா வான வூர்தி
எய்துப வென்பதம் செய்வினை முடித்து.'

- புறம்.

'நிலவரை நீள்புக ழாற்றின் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு.'

- திருக்குறள்.