8கற்றலிற் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று.

(ப-பொ.) தான் ஒன்றைக் கற்குமதனினும்சிறப்புடைத்துக் கற்றாரை வழிபாடு செய்தல்.

(ப-ரை.) கற்றாரை - கல்வியறிவுடையாரை, வழிபடுதல் - உபசரித்தொழுகுதல், கற்றலின் - ஒன்றைக் கற்பதைக் காட்டிலும், சிறந்தன்று -சிறந்ததாம்.

ஒருவன் கற்றலும் வேண்டும்; கற்றாரை வழிபடுதலும் வேண்டும் : இவ்விரண்டிலும் வழிபாடு சிறந்ததாம். வழிபாடு செய்தலால் குருவருள் உண்டாகும் : அஃதுண்டாகவே தான் கற்கலுற்றது கைகூடும். தண்டாப்பத்திலும் இந்நூல், 'கற்றல் வேண்டுவோன் வழிபாடு தீண்டான்'என்றுரைக்கின்றது.

'தேவரனையர் புலவரும்; தேவர்
தமரனையர் ஒரூர் உறைவார்; தமருள்ளும்
பெற்றன்னர் பேணி வழிபடுவார்; கற்றன்னர்
கற்றாரைக் காதலவர்'

- நான்மணிக்கடிகை.