கொடிய புலிகள், வாழும் அதர் - வாழ்கின்ற வழியானது, இன்னா துன்பமாம் எ-று. கோட்டுயர் பாய்தல் என்பதற்குக் கோட்டின் நுனியிலேறி யதோடமையாது மேலும் பாய்ந்து சேறல் என்று பொருள் கூறலுமாம்; நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி, னுயிர்க்கிறுதி யாகிவிடும்' என்பது ஈண்டு நோக்கற்பாலது. நெடுமர நீள் கோட்டுயர் பாய்தல் முதலிய நான்கற்கும், ஓட்டென்னும் அணிபற்றி, முறையே தம் வலியளவறியாது பெரிய வினைமேற் சேறலும், வலியார்க்கு மாறேற்றலும், உடம்பாடிலாத உட்பகையுடன் வாழ்தலும், பகைக்கெளியராம்படி நெறியலா நெறியிற்சேறலும் இன்னாவாமெனப் பொருள்கோடலும் பொருந்துமாறு காண்க 31. பண்ணமையா யாழின்கீழ்ப் பாடல் பெரிதின்னா எண்ணறியா மாந்தர்1ஒழுக்குநாட் கூற்றின்னா மண்ணின் முழவி னொலியின்னா வாங்கின்னா தண்மை யிலாளர்2பகை. (ப-ரை.) பண் அமையா - இசை கூடாத, யாழின் கீழ் - யாழின் கீழிருந்து, பாடல் - பாடுதல், பெரிது இன்னா மிகவுந்துன்பமாம்; எண் அறியா மாந்தர் - குறி நூல் (சோதிடம்) அறியாத மாக்கள், ஒழுக்கு நாள் கூற்று - ஒழுகுதற்குரிய நாள் கூறுதல், இன்னா துன்பமாம்; மண் - இல் - மார்ச்சனையில்லாத, முழவின் - மத்தளத்தினது, ஒலி - ஓசை, இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, தண்மை இலாளர் - தண்ணிய குணம் இல்லாதவரது, பகை - பகையானது, இன்னா - துன்பமாம் எ-று. பண் என்பதனை முதனிலைத் தொழிற்பெயராகக்கொண்டு, இசைக்கரணம் எட்டனு ளொன்று என்னலுமாம் ஒழுகுதற்குரிய நாளாவது கருமங்கட்கு விதிக்கப்பட்ட நாள். நற்கணமுடையார் பகையிடத்தும் இனியன செய்தலும், நற்குணமில்லார் நட்பிடத்தும் இன்னா செய்தலும் உடையாராகலின் தண்மையிலாளர் பகை இன்னா வெனப்பட்டது; தீயோர்பால் பகையும் நண்புமின்றி நொதுமலாக விருத்தல் வேண்டுமென அறிக. 32. தன்னைத்தான் போற்றா தொழுகுத னன்கின்னா முன்னை யுரையார் புறமொழிக் கூற்றின்னா நன்மை யிலாளர் தொடர்பின்னா வாங்கின்னா தொன்மை யுடையார் கெடல்.
(பாடம்) 1.எண்ணறிய மாந்தர். 2.தன்மையிலாளர்.
|