(ப-ரை.) தன்னைத்தான் - (ஒருவன்) தன்னைத்தானே, போற்றாது - காத்துக்கொள்ளாது, ஒழுகுதல் - நடத்தல், நன்கு இன்னா - மிகவுந் துன்பமாம்; முன்னை உரையார் - முன்னே சொல்லாமல், புறமொழிக் கூற்று - புறத்தே பழித்துரைக்கும் புறங்கூற்று, இன்னா - துன்பமாம்; நன்மை இலாளர் - நற்குணமில்லாதவரது, தொடர்பு - நட்பு, இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, தொன்மை உடையார் - பழைமையுடையவர், கெடல் - கெடுதல், இன்னா - துன்பமாம் எ-று. தன்னைத்தான் போற்றுதலாவது மனமொழி மெய்கள் தீயவழியிற் செல்லாது அடக்குதல். முன்னை-ஐ: பகுதிப்பொருள் விகுதி. உரையார் : முற்றெச்சம். மொழிக்கூற்று : ஒரு பொருளிருசொல் தொன்மையுடையார் கெடல் என்றது தொன்று தொட்டு மேம்பட்டு வரும் பழங்குடியினர் செல்வங் கெடுதல் என்றபடி. 33. கள்ளுண்பான் கூறுங் கருமப் பொருளின்னா முள்ளுடைக் காட்டி னடத்த னனியின்னா1 வெள்ளம் படுமாக் கொலையின்னா வாங்கின்னா கள்ள மனத்தார் தொடர்பு. (ப-ரை.) கள் உண்பான் - கட்குடிப்பவன், கூறும் - சொல்லுகின்ற, கருமப்பொருள் - காரியத்தின் பயன், இன்னா - துன்பமாம்; முள் உடை காட்டில் - முட்களையுடைய காட்டில், நடத்தல் - நடத்தலானது, நனி இன்னா - மிகவுந் துன்பமாம்; வெள்ளம் படு - வெள்ளத் திலகப்பட்ட, மா - விலங்கு, கொலை, - கொலையுண்டல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, கள்ளம் மனத்தார் : வஞ்சமனத்தினை யுடையாரது, தொடர்பு - நட்பு, இன்னா துன்பமாம் எ-று. மாக்கொலை - விலங்கைக் கொல்லுதல் எனினும், நீர்ப் பெருக்கிலகப்பட்டு வருந்தும் விலங்கைக் கரையேற வொட்டாது தடுத்துக் கொல்லுதல் இன்னாவாம் என்பது கருத்து. 34. ஒழுக்க மிலாளார்க் குறவுரைத்த2லின்னா விழுத்தகு நூலும்3விழையாதார்க் கின்னா இழித்த தொழிலவர் நட்பின்னா வின்னா கழிப்புவாய் மண்டிலங் கொட்பு.
(பாடம்) 1. நடக்கி னனியின்னா. 2. ஒழுக்கமிலாளர் குறைவுரைத்தல் 3. விழித்தகுநூலும்.
|