10

"ஏற்றுவலனுயரிய வெரிமரு ளவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனுங்
கடல்வளர் புரிவளை புரையு மேனி
யடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனு
மண்ணுறு திருமணி புரையு மேனி
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனு
மணிமயி லுயரிய மாறா வென்றிப்
பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென
ஞாலங் காக்குங் கால முன்பிற்
றோலா நல்லிசை நால்வ ருள்ளும்"

என்னும் புறப்பாட்டால்பலராமனைக்கூறுதல் தமிழ் வழக்காதலுணர்க. பலராமன் வெண்ணிற முடையனாகலின் வெள்ளை எனப்பட்டான். பொற்பனவூர்தி என்னும் பாடத்திற்கு அழகிய அன்ன வாகனத்தையுடைய பிரமன் என்று பொருள் கூறிக்கொள்க இனியவை நாற்பதில் அயனையும் வாழ்த்தினரை காண்க. ஒழுகு முதனிலைத் தொழிற்பெயர். 

நூல்

1. பந்தமில் லாத மனையின் வனப்பின்னா
தந்தையில் லாத புதல்வ னழகின்னா
அந்தண ரில்லிருந் தூணின்னா1வாங்கின்னா
மந்திரம் வாயா விடின்.

(ப-ரை.) பந்தம் இல்லாத - சுற்றமில்லாத, மனையின் இல்வாழ்க்கையின், வனப்பு - அழகானது, இன்னா - துன்பமாம் தந்தையில்லாத - பிதா, இல்லாத, புதல்வன் - பிள்ளையினது, அழகு - அழகானது, இன்னா - துன்பமாம்; அந்தணர் - துறவோர், இல் இருந்து - வீட்டிலிருந்து, ஊண் - உண்ணுதல், இன்னா துன்பமாம் ஆங்கு - அவ்வாறே, மந்திரம் - மறைமொழியாய மந்திரங்கள், வாயாவிடின் - பயனளிக்காவிடின், இன்னா துன்பமாம் எ-று.

பந்தம் - கட்டு; சுற்றத்திற்காயிற்று. மனை - மனைவாழ்க்கை அதன் வனப்பாவது செல்வம். "சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன்" என்பவாகலின் சுற்றமில்லாத மனையின் வனப்பு இன்னாவாயிற்று. இனி, அன்பில்லாத இல்லாளின் அழகு, இன்னாவாம் எனினும் அமையும் ‘தந்தையொடு கல்வி போம்'. ஆதலின் ‘தந்தையில்லாத' என்றதனால் கல்விப் பேற்றையிழந்த, என்னும் பொருள் கொள்ளப்படும்.அந்தணர்


(பாடம்) 1.ஊணின்னாது.