மாட்சிமையில்லாத, பெண்டிரை - மனைவியரை, நீக்கல் - விலக்கி விடுதல், இனிது-; மனம் மாண்பு இலாதவரை - மனத்தின்கண் மாட்சிமை யில்லாதவரை, அஞ்சி அகறல் - அஞ்சி நீங்குதல், எனை மாண்பும் - எல்லா மாட்சியினும், நன்கு இனிது - மிக வினிது. "உண்கடன் வழிமொழிந் திரக்குங்கால் முகனுந்தாங் கொண்டது கொடுக்குங்கால் முகனும்வே றாகுதல் பண்டுமிவ் வுலகத் தியற்கைஃ தின்றும் புதுவ தன்றே புலனுடைய மாந்திர்"(கலி - 22) எனவும், "விடன்கொண்டமீனைப் போலும் வெந்தழன் மெழுகைப் போலும் படன்கொண்ட பாந்தள் வாயிற் பற்றிய தேரை போலுந் திடன்கொண்ட ராம பாணஞ் செருக்களத் துற்ற போது கடன்கொண்ட நெஞ்சம் போலுங் கலங்கின னிலங்கை வேந்தன் " எனவும் இருத்தலின், ‘கடமுண்டு வாழாமை காண்ட லினிதே' என்றார். ‘நிறை மாண்பில் பெண்டிரை நீக்க லினிதே ' என்றது. கற்பழிந்த மனைவியொடு கலந்து வாழ்தல் இம்மையிற் றலையிறக்கத்தையும் பெருந்துன்பத்தையும் தருதலே யன்றி, மறுமையினும் நரகத்தைத் தருதல் பற்றி யென்க. அதுகூடாதென்பதனை, "வினையிலென் மகன்றனுடல் வேறுசெய்வித் தோனைக் குனிசிலையி னாளையுயிர் கோறல்புரி யேனேல் மனைவியய லான்மருவல் கண்டுமவள் கையாற் றினையளவு மோர்பொழுது தின்றவனு மாவேன் " (பாரதம்) "கற்பழி மனைவி யோடு கலந்திருப் பவனு மற்றோர் பொற்புடை மனைவி தன்னைப் புணர்வதற் கெண்ணு வானுஞ் சொற்பொரு ளுணர்த்தி னானைத் தொழவுள நாணு வானும் விற்பன வலாத விற்று மெய்வளர்த் தழிகு வானும் " ‘ஆவனா னுண்மை ........(பிரபுலிங்கலீலை) என்றிருத்தலிற்றெளிக.
|