26

என்றபடி பெறாதவற்றைக் காமுறுதல் உயிர்க்கியல்பாகலின் ‘இல்லது காமுற்றிரங்கி யிடர்ப்படார்'என்றார்.

இல்லது : வினையாலணைந்த பெயர்.

25. ஐவாய வேட்கை யவாவடக்கல் முன்இனிதே
கைவாய்ப் பொருள்பெறினுங் கல்லார்கண் தீர்வினிதே
நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது
.

(ப-ரை.) ஐவாய வேட்கை - ஐந்து வழியான் வருகின்ற ஆசையையும், அவா - (அதனை ஒருகால் விடினும் பழைய பயிற்சி வயத்தான் அதன்கட் செல்லும்) நினைவையும், அடக்கல் ஒழித்தல், இனிது-; கைவாய்ப் பொருள்- கையினிடத்து நிற்கக் கூடிய பொருளை, பெறினும் - பெறுவதாயிருப்பினும், கல்லார் கண் - கல்லாதவரை, தீர்வு - விடுதல் , இனிது-; நில்லாத காட்சி நிலையில்லாத அறிவினையுடைய, நிறையில் - (நெஞ்சை) நிறுத்துலில்லாத, மனிதரை-, புல்லா விடுதல் - சேராது நீங்குதல்,இனிது-.

ஐந்து வழியாவன : மெய், வாய், கண் , மூக்கு,செவி என்பன.

"மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்க்
கலங்காமல் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும் "

(நாலடி - 59)

என்பது காண்க.

கைவாய்ப் பொருளென்றது சேம நிதியை; 22ஆவது பாட்டின்குறிப்புரை காண்க.

"விலங்கொடு மக்களனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்"

(குறள் - 410)

என்றிருத்தலின், ‘கல்லார்கட் டீர்வினிதே ' என்றார்.

கற்றுவைத்தும் அறிவு மயங்குதலும்மனஞ்சென்றவழி யெல்லாஞ் செல்லுதலுமாகிய தீயொழுக்கமுடையார், சேர்க்கை கேடு பயத்தலின், ‘நில்லாத காட்சி நிறையின் மனிதரைப் புல்லாவிடுதலினிது என்றார். நிறையாவது (நெஞ்சினை) நிறுத்தல். ‘நிறையெனப் படுவது மறைபிறரறியாமை' எனக் கலித்தொகை கூறுதலுமறிக.

புல்லா : வினையெச்ச வீறு புணர்ந்து கெட்ட தென்க.