(ப-ரை.) தானம் கொடுப்பான் - (அபயமென்பார்க்கு) இடங்கொடுப்பானது, தகை ஆண்மை - பெருமை பொருந்திய வீரம் , முன் இனிது - மிக வினிது ; பட மானம் வரின் - தான் இறப்ப மானம் எய்து மெல்லை வரின், வாழாமை - உயிர் வாழாமை, முன் இனிது-; ஊனம் கொண்டாடார் - குற்றம் பாராட்டாதவராய், உறுதி உடையவை - நன்மை யுடையனவற்றை , கோள் முறையால் - கொள்ளுமுறைமைப்படி , கோடல் - கொள்ளுதல்,இனிது-. தானம் கொடுப்பான் அபயப்ரதானஞ்செய்துதன் பக்கல் இடந் தந்து பாதுகாப்பவன். ‘மாவீரனல்லனாயின் அது செய்யத் துணியான் ' என்பது குறிப்பு. ‘தானங்கொடுப்பான் தகையாண்மை' என்பதற்கு அன்ன முதலிய தானங்களைச் செய்வானது தகுதியின் றலைமை என்பர் பழையவுரைகாரர். மானம் இன்னதென 14 ஆவது பாட்டுரைக்கண் உரைத்தாம். ‘மானம் வரின்' என்பதற்குப் பரிமேலழகருரை கண்டு தெளிக. ‘நீரை நீக்கிப் பாலை யுண்ணும் அன்னப்பறவை போலக் குற்றமுடையன நீக்கிக் குணமுடையன கொள்க' என்பார். ‘ஊனங்கொண்டாடாருறுதி யுடையவை எனவும், காரணகாரியம், ஐநக ஐந்யம் முதலிய சம்பந்தங்களுள் யாதானு மொன்றுபற்றி இது கேட்டபின் இது கேட்கத்தக்கதென ஆன்றோர் கொள்ளுமுறைப்படி கொள்க என்பர், ‘ கோண் முறையால்' எனவுங்கூறினார். இனி, கோள்முறையாவது கோடன் மரபென்பாருமுளர்.அஃதின்னதென, "கோடல் மரபே கூறுங் காலைப் பொழுதொடு சென்று வழிபடல் முனியான் குணத்தொடு பழகி யவன்குறிப் பிற்சார்ந்து இருவென இருந்து சொல்லெனச் சொல்லிப் பருகுவன் அன்ன ஆர்வத்த னாகிச் சித்திரப் பாவையின் அத்தக வடங்கிச் செவிவா யாக நெஞ்சுகள னாகக் கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப் போவெனப் போதல் என்மனார் புலவர்" (நன்னூல்) என்னுஞ் சூத்திரத்தா னறிந்துகொள்க. 28. ஆற்றானை யாற்றென் றலையாமை முன்இனிதே கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே ஆக்க மழியினும் அல்லவை கூறாத தேர்ச்சியின் தேர்வினியது இல்.
|