29

(ப-ரை.) ஆற்றானை - (ஒரு தொழிலைச்) செய்யமாட்டாதானை, ஆற்று - (அதனைச்) செய்யென, அலையாமை - வருத்தாமை, முன் இனிது - மிகவினிது ; கூற்றம் - யமனது, வரவு உண்மை - வருகையின் நிச்சயத்தை சிந்தித்து வாழ்வு - நினைத்து வாழ்வது , இனிது-; ஆக்கம் அழியினும் - செல்வமழிந்தாலும், அல்லவை கூறாத - பாவச் சொற்களைச் சொல்லாமைக் கேதுவாகிய , தேர்ச்சியின் - தெளிவினும், தேர்வு-தெளிவு, இனியது இல் -பிறிதொன்றில்லை.

வன்மை கண்டு ஏவினல்லது தன்மாட்டுஅன்புடைமை கண்டு ஏவி வருத்தினும் வினை முடியாதாகலின் ‘ஆற்றானை யாற்றென்றலையாமை' என்றார். இதனை,

"அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று"

(குறள் - 515)

என்பதனானுந் தெளிக.

மரணம் வருதலை நினைப்பிற் பாவ வழியில் மனஞ்செல்லாமையின் ‘கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வு' என்றார் ‘பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி ' என்றார் பிறரும்.

அல்லவை யென்றது பிறர்க்குத் தீங்கு பயக்கும் பொய் முதலியனவும் வருணத்திற்கு உரிய அல்லனவுமாம். அவைகூறின் ஒருவன்மாட்டு ஒழுக்கமின்மை வெளிப்படுதலின் கூறாத தேர்ச்சியின்'என்றார்.

"ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்"

(குறள் - 139)

என்றிருத்தல் காண்க.

‘கூறாத' : காரியத்தின்கண் வந்தபெயரெச்சமாம்.

29. கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே
உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே
எளியர் இவரென் றிகழ்ந்துரையா ராகி
ஒளிபட வாழ்தல் இனிது.

(ப-ரை.) கயவரை - கீழ்மக்களை , கைகழிந்து - நீங்கி, வாழ்தல் - வாழ்வது, இனிது-; உயர்வு உள்ளி (தான் மேன் மேல்) உயர்தலை நினைத்து, ஊக்கம் பிறத்தல் - (ஒருவற்கு) மனவெழுச்சியுண்டாதல், இனிது-; எளியர் இவர் என்று- இவர்வறிய ரென்று, இகழ்ந்து உரையாராகி - அவமதித்து இழிவு சொல்லாராகி, ஒளிபட வாழ்தல் - புகழுண்டாக வாழ்வது , இனிது-.