‘மன்றம்' என்புழி அத்துச் சாரியையும் ஏழனுருபுந்தொக்கன. "நன்றிப் பயன்தூக்கா நாணிலியுஞ் சான்றோர்முன் மன்றிற் கொடும்பா டுரைப்பானும் - நன்றின்றி வைத்த அடைக்கலங் கொள்வானு மிம்மூவர் எச்சம் இழந்துவாழ் வார்" (திரிகடுகம் - 62) எனவும், "வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே பாதாள மூலி படருமே - மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்றோரஞ் சொன்னார் மனை " (நல்வழி - 23) எனவும் பிறருங் கூறியவாற்றான், ‘மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே 'என்றார். சான்றியதென அடைக்கலப் பொருளைஅபகரிப்பின் தெய்வங் கண்டு ஒறுத்தலின், ‘அன்றறிவா ரியாரென் றடைக்கலம் வௌவாத, நன்றியி னன்கினிய தில்'என்றார். தெய்வங் காணுமென்பதனை, "வஞ்சித் தொழுகும்மதியிலிகாள் யாவரையும் வஞ்சித்தோ மென்று மகிழன்மின் - வஞ்சித்த எங்கும் உளன்ஒருவன் காணுங்கொ லென்றஞ்சி அங்கங் குலைவ தறிவு " (நீதிநெறி விளக்கம் - 94) என்பதனாலும், அடைக்கலப்பொருளை அபகரிப்பிற்பெருந்துன்பம் விளையுமென்பதனை, "அடைக்கலம் வௌவுத லின்னாவாங் கின்னா அடக்க வடங்கா தார் சொல் " (இன்னா - 41) என்பதனானுந் தேர்க. 31. அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே கடன்கொண்டுஞ் செய்வன செய்தல் இனிதே சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து அறிந்துரைத்தல் ஆற்ற இனிது.
|