38

எனத் தம்பி யொருவன் பரிந்தவாறு சுற்றத்தார் யாவரும் பரிந்து துணைசெய்தலின், ‘நாட்டாருடையான் பகை யாண்மை முன்னினிதே' எனவும் ;

"திண்ண மிரண்டுள்ளே சிக்க அடக்காமற்
பெண்ணின்பால் ஒன்றைப் பெருக்காமல் - உண்ணுங்கால்
நீர்சுருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி உண்பவர்தம்
பேருரைக்கிற் போமே பிணி "

(தேரையர்)

என்றபடி விருந்தைச் சிறப்பிப்பன் உருக்குநெய்யும் பெருக்கு மோருமாகலின் ‘எத்துணையு மாற்ற வினிதென்ப பால்படுங், கற்றாவுடையான் விருந்து எனவுங்கூறினார்.

39. பிச்சைபுக் குணபான் பிளிறாமை முன்இனிதே
துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே
உற்றபே ராசை1 கருதி அறனொரூஉம்
ஒற்கம் இலாமை இனிது.

(ப-ரை.) பிச்சை புக்கு - பிச்சைக்குச் சென்ற, உண்பான் (இரந்து) உண்பவன், பிளிறாமை- கோபியாமை, முன் இனிது - மிக வினிது; துச்சில் இருந்து - ஒதுக்குக் குடியிருந்து, துயர் கூரா - துன்ப மிக்கடையாத, மாண்பு - மாட்சிமை, இனிது-; உற்றபேர் ஆசை கருதி - மிக்க பேராசையைக் கருத்துட்கொண்டு , அறன் ஒரூஉம் - அற வழியினின்று நீங்குதற்கேதுவாகிய , ஒற்கம் - மனத்தளர்ச்சி , இலாமை - இல்லாதிருத்தல்,இனிது -.

"இரப்பான் வெகுளாமை வேண்டும்நிரப்பிடும்பை
தானேயுஞ் சாலுங் கரி "

(குறள் - 1060)

என்றபடி ஈவானுக்கு வேண்டிய பொழுது பொருளுதவா தொழிதலும்உண்டென்பதற்குத் தன் வறுமையே சான்றாத லறிந்து இரப்பவன் வெகுளாமை வேண்டுமென்பார் ‘பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்னினிதே' என்றார். ஒதுக்குக் குடியிருத்தல் துன்பத்திற் கேதுவாதலை

"புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சி லிருந்த வுயிர்க்கு "

(குறள் - 340)

என்பதனாலும்,


1. பொலிசை (ஊதியம்) என்பர் திரு. வையாபுரிப் பிள்ளையவர்கள்.